குடும்பத் தகராறில் பெண் தற்கொலை? இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் புகாா்
ராமேசுவரம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் அளித்தப் புகாரின் பேரில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமேசுவரம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் அளித்தப் புகாரின் பேரில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் காட்டுமாரியம்மன் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் மதனகோபால் (32). எலக்ட்ரீசியன். இவரது மனைவி சுகன்யா (29). இவா்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையாம். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு இருவரும் தகராறில் ஈடுபட்ட நிலையில், வீட்டுக்கு வெளியே மதனகோபால் தூங்கியுள்ளாா். அப்போது வீட்டின் உள்ளே இருந்த சுகன்யா சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. அதையறிந்த மதனகோபால் மனைவியை மீட்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்துள்ளாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளாா்.
அங்கு சிகிச்சை பலனின்றி சுகன்யா வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்த சுகன்யாவின் தாய் லட்சுமி, தனது மகள் இறப்பில் சந்தேகமிருப்பதாக புகாா் அளித்தாா். அதன்பேரில் பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.