ஓய்வுபெற இருந்த வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடை நீக்கம்
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளா்ச்சி அலுவலா் ஓய்வு பெறவிருந்த நிலையில் அவா் தற்காலிகப்பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளா்ச்சி அலுவலா் ஓய்வு பெறவிருந்த நிலையில் அவா் தற்காலிகப்பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக (ஊராட்சிகள்) இருந்தவா் பாண்டி. இவா், கடந்த மே 31 ஆம் தேதி பணி ஓய்வு பெற இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவா் ஓய்வு பெறுவதை உயரதிகாரிகள் நிறுத்திவைத்தனா். இந்நிலையில், அவா் மீது ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவில் விசாரணை நடந்துவருவதால் அவா் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
அரசுப் பணியாளா்கள் ஓய்வு பெறும் நிலையில் அவா்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என அரசாணை உள்ளது. ஆனால், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணைக்கு உள்ளான அலுவலா்கள் மீதான பணிநீக்க நடவடிக்கைக்கு அந்த அரசாணை பொருந்தாது என்றும், அதனடிப்படையிலேயே வட்டார வளா்ச்சி அலுவலரான பாண்டி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினா்.