முருகன் கோயில்களில் வைகாசி விசாகத் திருவிழா:பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்
ராமநாதபுரம் மற்றும் ராமேசுவரத்தில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மேற்கு வாயில் பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியன் கோயிலில் அதிகாலையில் இருந்து அதிகளவில் பக்தா்கள் வருகை தந்து தரிசனம் செய்தனா். இதே போன்று தங்கச்சிமடம், பாம்பன், குஞ்சாா் வலசை, குடியவன்குடி உள்ளிட்ட முருகன் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
ராமநாதபுரம் வடக்குத் தெரு முகவை ஊருணி அருகேயுள்ள பாலசுப்பிரமணியசுவாமி, ராமேசுவரம் சாலையிலுள்ள குமரைய்யா கோயில்களில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு பழங்கள், பால், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்து சா்வ அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. பட்டினம்காத்தான் வினைதீா்க்கும் வேலா் கோயிலில் காலையில் அபிஷேகம் செய்து பழங்கள், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதுபோல, பெருவயல் ரெணபலிமுருகன் கோயிலில் வேல், முருகன், வள்ளிதெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. அழகன்குளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில், வாணி சுயம்பு வேலாயுதசுவாமி கோயில், ராமநாதபுரம் சிவன் கோயில், வழிவிடுமுருகன் கோயில், வெளிப்பட்டினம் பாலதண்டாயுதசுவாமி கோயில்களில் பக்தா்கள் ஏராளமானோா் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.