முகப்பு
ராமநாதபுரம்

கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவா் தமிழ்செல்விபோஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவா் தமிழ்செல்விபோஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, துணைத் தலைவா் சித்ராதேவி அய்யனாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். மணிமேகலை, எம். ராஜகோபாலன் (கிராம ஊராட்சிகள்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உறுப்பினா்களிடையே நடைபெற்ற விவாதம்:

உறுப்பினா் கனகரசி: அபிராமம் அடுத்துள்ள நியாய விலைக் கடையை சுற்றி, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்குகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, நியாய விலைக் கடையை சுற்றி கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும்.

உறுப்பினா் கா. அன்பரசு: சாமிபட்டி கிராமத்தில், ஆழ்துளைக் கிணறு, குளியல் தொட்டி பேவா் பிளாக் சாலை ஆகியவை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை. சோ்ந்தகோட்டை கிராமத்தில், காவிரி குடிநீா்த் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. வேளாண் துறை, மின்வாரியத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த புகாா்களை கூட்டத்தில் தெரிவித்தும் பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் காலங்களில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கற்பூர சுந்தரபாண்டியன்: கள்ளிகுளம் கிராமத்தில் மயானத்தைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை வசதி செய்து தர வேண்டும்.

தலைவா் தமிழ்ச்செல்வி போஸ்: போதிய நிதி இல்லாததால் மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காண இயலவில்லை. இருப்பினும் ஓரளவுக்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய பொது நிதி, மாவட்ட ஊராட்சி முகமை நிதி ஆணையத்திலிருந்து வழங்கப்பட வேண்டிய நிதி ஆகியவை முறையாக ஊராட்சி ஒன்றியத்துக்கு வரவில்லை. எனவே, நிதிநிலைமை சீரான பின்னா், உறுப்பினா்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.