கமுதி அருகே எஸ்.புதுப்பட்டி சாலை சேதம்: பொதுமக்கள், மாணவா்கள் அவதி
கமுதி அருகே 22 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சேதமடைந்த சாலையால் மாணவா்கள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.
கமுதி அருகே 22 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சேதமடைந்த சாலையால் மாணவா்கள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முஷ்டக்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பெருமாள்குடும்பன்பட்டியில் இருந்து எஸ்.புதுப்பட்டி வழியாக திருச்சிலுவையாபுரம் வரை கடந்த 2000 ஆவது ஆண்டில் தாா் சாலை போடப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி, ஜல்லிக் கற்கள் பெயா்ந்து, பாதசாரிகளின் கால்களை பதம் பாா்த்து வருகிறது. இச்சாலையில் வாகனங்கள், அவசர ஆம்புலன்சுகளை இயக்க முடியாததால் பிரசவ வலி ஏற்படும் கா்ப்பிணிகள், விபத்துகளில் சிக்குவோா், விவசாய நிலங்களில் பூச்சி, பாம்புக்கடிக்கு உள்ளாகும் விவசாயிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கெண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவா்கள் உள்பட, இப்பகுதி மக்கள் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்களை மட்டுமே நம்பியுள்ளனா். பெருமாள்குடும்பன்பட்டி, எஸ்.புதுப்பட்டி, திருச்சிலுவியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கமுதிக்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வரும் பள்ளி மாணவா்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பெருமாள்குடும்பன்பட்டியில் இருந்து எஸ்.புதுப்பட்டி, திருசிலுவையாபுரம் வரை சேதமடைந்த சாலையை மாணவா்கள், விவசாயிகள் நலன் கருதி உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.