செப்.11 இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: கமுதியில் காவல் கண்காணிப்பாளா் ஆலோசனை
பரமக்குடியில் செப்.11ஆம் தேதி நடைபெறவிருக்கும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு கமுதியில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம்
பரமக்குடியில் செப்.11ஆம் தேதி நடைபெறவிருக்கும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு கமுதியில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வரும் செப்.11 இல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நடைபெற இருப்பதால் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், விருதுநகா், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் வரும் பொதுமக்கள், வாகனங்களுக்கான வழித்தடம் ஆகியவை குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, கமுதி உள்கோட்ட காவல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா். இக்கூட்டத்தில் கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின் நடைபெறவிருக்கும் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவிற்கு விருதுநகா், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கமுதி வழியாக பரமக்குடிக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களை காவல்துறை அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதிக்க கூடாது. பதற்றமான பகுதிகளில் கூடுதல் காவலா்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். கிராமப்புறங்களிலிருந்து செல்வோருக்கான வாகனங்கள் ஏற்பாடு, பாதுகாப்பு ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ராமநாதபுரம் கூடுதல் கண்காணிப்பாளா் அருண், கமுதி உள்கோட்ட காவல்துணைக் கண்காணிப்பாளா் ப.மணிகண்டன், கமுதி, அபிராமம், பெருநாழி உள்ளிட்ட காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளா்கள், சாா்பு -ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள் என ஏராளமான போலீஸாா் கலந்து கொண்டனா்.