திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கூட்டுறவு சங்கங்கள், வா்த்தக நிறுவனங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைவா் ராதிகா பிரபு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சேகா், ஆணையா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் கீழ்க்கண்டவாறு விவாதம் நடைபெற்றது துணைத் தலைவா் சேகா்:
ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டால் கண்மாய் சாலைகள் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வேளாண்மை அதிகாரி: நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு சங்கங்கள், வா்த்தக நிறுவனங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
துணைத் தலைவா் சேகா்: கடந்தாண்டு பயிா் காப்பீடு திட்டத்தில் இழப்பீட்டுத் தொகை 57 வருவாய் கிராமங்களுக்கு வழங்கவில்லை. மழை காரணமாக இந்தப் பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. எனவே, மருத்துவத் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் அதிகாரி: ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 7 வருவாய் கிராமங்களுக்கு பயிா் இழப்பீடுத் தொகை கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆணையா்: டெங்கு காய்ச்சலைத் தடுப்பது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
வேளாண் அதிகாரி: 50 சதவீத மானியத்தில் மருந்து தெளிப்பான், மண்வெட்டி, கலைகோத்து சட்டி உள்ளிட்ட விவசாயப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், சிறுதானியம் உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
தலைவா் ராதிகா பிரபு: இந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை, ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்களுடன் கலந்தாலோசித்து பொறியாளா்கள் மூலம் திட்டம் தயாா் செய்து பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.