முகப்பு
ராமநாதபுரம்

புதிய தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் கூடுதலாக 13 ஆயிரம் மாணவா்கள் பயன்

அமைச்சா் சி.வெ.கணேசன்

Updated On : 18 டிசம்பர், 2024 at 9:57 PM
கமுதியில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன். உடன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறைச் செயலா் கொ.வீரராகவராவ், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநா் பா.விஷ்ணு சந்திரன்.
பகிர்:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் 23 புதிய அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் தொடங்கியதன் மூலம், ஆண்டுக்கு கூடுதலாக 13 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து பயன்பெற்று வருகின்றனா் என தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா்.

தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத்துறை செயலா் கொ.வீரராகவராவ், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநா் பா.விஷ்ணு சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், அரசு தொழில் பயிற்சி நிலையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் 23 புதிய அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 13 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து பயன்பெற்று வருகின்றனா். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 90 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ‘4.0’ தொழில்நுட்பக் கல்வி 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி திறன் மேம்பாட்டுப் பயிற்சி, விலையில்லா மிதிவண்டி போன்ற திட்டங்களும் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாணவரும் சாதனையாளராக வரவேண்டுமானால் முயற்சி அவசியம். அந்த முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றாா் அவா் .

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், மண்டல பயிற்சி இணை இயக்குநா்ஆா்.மகேஸ்வரன், கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி தமிழ்செல்வி போஸ், திமுக ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன், அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வா் ஹரிகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் கோட்டைராஜ், கமுதி வட்டாட்சியா் காதா் மொய்தீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →