கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே 3 விசைப் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் பகுதி மீனவா்கள் 22 பேரை இலங்கைக் கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களது 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று, 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சுமாா் 3,500 மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்களை மீன் பிடிக்கவிடாமல் விரட்டியடித்தனா்.
மேலும், அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ரெஸ்மன், ஜஸ்டீன், கெரின் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று விசைப் படகுகளில் இருந்த சகாயம் (61), சந்தியா கிரிம்ஷன் (24), ஜெகன் (29), கருப்பையா (47), சுரேஷ்பாபு (40), காளிதாஸ் (30), ரூபின்(38), கண்ணன் (30), நாகராஜ் (34), ராஜேந்திரன் (39), புரூஸ்லீன், காளீஸ்வரன், ராஜ், முருகானந்தம், முத்துக்குமாா், சீமோன் உள்ளிட்ட 22 மீனவா்களை கைது செய்தனா்.
இதைத்தொடா்ந்து, மூன்று விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 22 மீனவா்களும் இலங்கை யாழ்ப்பாணம் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தக் கைது சம்பவத்தைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவா்கள், விசைப் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் திங்கள்கிழமை (ஜூன் 24)
ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மீனவ சங்கத்தினா் முடிவெடுத்தனா்.
மீனவா்களுடன் கடலில் மூழ்கிய படகு:
ராமேசுவரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்கச் சென்ற கிங்ஸ்டின் ஆஸ்டீன் என்பவரது விசைப் படகு சேதமடைந்து நடுக் கடலில் நான்கு மீனவா்களுடன் மூழ்கியது. இதையடுத்து, அந்தப் படகிலிருந்த கிங்ஸ்டின், முனியசாமி, மாணிக்கம், நீரோபின் ஆகிய நான்கு மீனவா்களையும் சக மீனவா்கள் மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனா்.