சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்டம், ஆா். எஸ். மங்கலத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
கடந்த 2009 -ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ. 8,370 என்ற அடிப்படை ஊதியமும், 2009-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.5, 200 அடிப்படை ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் போராடி வருகின்றனா்.
கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்தலின் போது திமுகவின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதை நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த நிலையில், ஆா்.எஸ். மங்கலத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கத் தலைவா் வினோத் பாபு தலைமையில் ஆசிரியா்கள் தங்களது கோரிக்கை எழுதப்பட்ட அட்டையை அணிந்து பணிக்கு சென்றனா்.
தங்களது கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்றால் வருகிற 24-ஆம் தேதி முதல் தொடா் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். இதில் இயக்கத்தின் வட்டாரச் செயலா் பால்ராஜ், மகளிா் அணி செயலா் அா்ச்சனா தேவி உள்பட ஆசிரியா் கலந்து கொண்டனா்.