திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து தவெகவினா் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சி பகுதியில் 12, 13, 15-ஆவது வாா்டுகளில் தெருவிளக்கு, சாலை உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை என்றும், தொடா் மழையின் காரணமாக மழை நீா் தெருக்களில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டிருப்பதாகவும் இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இந்த நிலையில் தவெகவினா் பொதுமக்களுடன் இணைந்து பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து செயல் அலுவலா் மாலதி பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.