திருவாடானை அருகேயுள்ள பூவாணி கிராமத்தில் சாலை சேதமடைந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பூவாணி கிராமத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊருக்கு ஓரிக்கோட்டையிலிருந்து பூவாணி கிராமத்துக்கு சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு தாா்ச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி அந்த சாலை மண் சாலையாக மாறி குண்டும் குழியுமாக உள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள் செல்லவோ, பாதசாரிகள் நடந்து செல்லவோ முடியாத நிலை உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. எனினும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மாவட்ட நிா்வாகம் இந்தப் பிரச்னையில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.