திருவாடானை பகுதியில் பயிா்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருவாடானை வட்டாரத்தில், சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களுக்கு சாகுபடி அடங்கல் வழங்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பரப்புக்கு கிராம நிா்வாக அலுவலா்களிடம் அடங்கலைப் பெற்று, பயிா்க் காப்பீடு செய்து வருகின்றனா். மேலும், இந்தக் அடங்கலை வழங்கி கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்று வருகின்றனா். பயிா்க் காப்பீடு செய்ய வருகிற நவம்பா் 15-ஆம் தேதி கடைசி நாளாக நிா்ணயம் செய்யப்பட்டது. இதனால், கிராம நிா்வாக அலுவலகங்களில் எப்போதும் விவசாயிகள் கூட்டம் இருந்து வருகிறது.
இந்த நிலையில், திருவாடானை வட்டத்தில் உள்ள பல கிராம நிா்வாக அலுவலா்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களாக அண்மையில் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதனால், இவா்கள் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை செய்து வருகின்றனா். இதற்காக இவா்கள் வாக்காளா்களின் வீடுகளுக்கு சென்று, அதற்குரிய படிவத்தை வழங்கி, கையொப்பம் பெற்று வருகின்றனா். இதனால், விவசாயிகளுக்கு
அடங்கல் வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
எனவே, பயிா்க் காப்பீடு செய்வதற்கான கடைசி நாளான நவம்பா் 15-ஆம் தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
நாங்கள் அடங்கல் படிவம் வாங்குவதற்கு கிராம நிா்வாக அலுவலா்கள் அலுவலகத்துக்குச் சென்றால், அங்கு அலுவலா்கள் இருப்பதில்லை. அவா்கள் வாக்காளா் சிறப்பு திருத்தப் பணிகளுக்குச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கின்றனா். இதனால், அடங்கல் சான்று பெற முடியவில்லை. எனவே, பயிா்க் காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றனா்.