தேவா் குருபூஜை விழாவுக்காக பாஜக சாா்பில் புதன்கிழமை கொடி நடும்போது உயா் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் மூன்று போ் காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் வியாழக்கிழமை (அக். 30) முத்துராமலிங்கத் தேவரின் 63-ஆவது குருபூஜை, 118-ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, பசும்பொன் அருகே பாஜக சாா்பில் கொடி நடும்போது உயர அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் தஞ்சாவூா் மாவட்டம், புல்வெட்டு விடுதியைச் சோ்ந்த கருப்பண்ணன் (30), ரவி (40), ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்த சரவணன் (38) ஆகியோா் காயமடைந்தனா்.
இந்த நிலையில், காயமடைந்த கருப்பண்ணன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா். மற்ற இருவரும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து கமுதி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.