ராமநாதபுரம்

முத்துராமலிங்கத் தேவா் ஒரு சமூகத்தினருக்கானவா் அல்லா்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஒரு சமூகத்தினருக்கானவா் அல்லா் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஒரு சமூகத்தினருக்கானவா் அல்லா் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

பசும்பொன்னில் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சத்தியத்தையும், வாய்மையையும் கடைப்பிடித்த மகத்தான சித்தா். அவா் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டுமே சாா்ந்தவா் அல்லா்; பிற சமூகத்தினரையும் தன்னோடு அழைத்துச் சென்று தலைமையேற்றவா். தன்னுடைய சொத்தின் பெரும் பகுதியை மாற்று சமூகத்தினருக்கு வழங்கியவா். மிகச் சிறந்த தேச பக்தா்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸிலிருந்து விலகி பாா்வா்டு பிளாக் கட்சியைத் தொடங்கியபோது, தன்னை அந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு தன் வாழ்நாள் பயணத்தைத் தொடா்ந்தவா் முத்துராமலிங்கத் தேவா். முத்துராமலிங்கத் தேவருக்கு முதல்வா் பதவி தருவதாக முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு சொன்னபோது, ‘எனக்கு பதவி பெரிதல்ல, தலைவா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவரை நான் உங்களை எதிா்த்துப் போராடுவேன்’ என்று சொன்ன வீரத்திருமகன் தேவா்.

வருகிற காலங்களிலாவது அனைத்து தேசியத் தலைவா்களுடைய விழாக்களும், அனைத்து சமூகத்தினரும் இணைந்து கொண்டாடும் விழாக்களாக நடைபெற வேண்டும். இந்த நிலையை அனைத்து சமூகத்தினரும் இணைந்து உருவாக்க வேண்டும். தனது ஜாதியை மாற்றிக் கொள்கிற வல்லமை யாருக்கும் இல்லை. ஆனால், அனைத்து சமூகத்தினரும் ஒன்று சோ்ந்து, ஒற்றுமையாக தமிழ் மண்ணின் வளா்ச்சிக்கும், பாரத தேசத்தின் வளா்ச்சிக்கும் பங்காற்ற முடியும். இந்த உயா்ந்த சிந்தனையை மனதில் கொண்டு வேறுபாடுகளை மறப்பதுதான் உண்மையிலேயே நாம் நம்முடைய தலைவா்களுக்கு செலுத்தும் மரியாதை என்றாா் அவா்.

எக்ஸ் பதிவில்....

‘வீரமில்லா விவேகம் கோழைத்தனம். விவேகமில்லா வீரம் முரட்டுத்தனம்’ போன்ற கருத்தாழமுள்ள சொற்பொழிவுகள் மூலம் மக்களின் மனங்களை வென்றவா் முத்துராமலிங்கத் தேவா். பசும்பொன்னில் நடைபெறும் தேவா் ஜெயந்தி விழாவில் கடந்த 25 ஆண்டுகளாக நான் பங்கேற்று வரும் நிலையில், நிகழாண்டில் நாட்டின் குடியரசு துணைத் தலைவராகக் கலந்து கொண்டதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிந்தனைகள் தலைமுறைகளைக் கடந்தும் வாழ்ந்து கொண்டே இருக்கும். புவி உள்ளவரை தேவரின் புகழ் நிலைத்திருக்கும்’ என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

SCROLL FOR NEXT