பாம்பனில் படகுகள் சீரமைப்புப் பணி மும்முரம்
மீன்பிடி தடைக் காலம் என்பதால், பாம்பன் மீன்பிடி இறங்குதளத்தில் விசைப் படகுகளை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
தற்போது மீன்பிடி தடைக் காலம் என்பதால், பாம்பன் மீன்பிடி இறங்குதளத்தில் விசைப் படகுகளை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
தமிழக வங்கக் கடலில் மீன் இனப் பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக் காலம் கடந்த 15- ஆம் தேதி தொடங்கியது.
இதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா், தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட பல்வேறு மீன் இறங்குதளங்களில் 1,650- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த தடைக் காலத்தின் போது மீனவா்கள் தங்களது விசைப் படகுகள், வலைகள், நங்கூரம், பலகை உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவா்.
Advertisement
பாம்பன் தெற்குவாடி மீன் இறங்கு தளத்தில் 110 விசைப் படகுகள் உள்ளன. இந்த இறங்கு தளம் சிறியது என்பதால், ஒரே நேரத்தில் அனைத்து விசைப் படகுகளையும் நிறுத்தி சீரமைப்பு பணியை மேற்கொள்ள இயலாது.
மேலும், படகு உரிமையாளா்கள் சிறிய பழுதாக இருந்தால் படகை கடலுக்குள் நிறுத்தியபடியே சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வா். ஆனால், பழுது அதிகமாக இருக்கும்பட்சத்தில் படகை கரையில் ஏற்றி சீரமைப்புப் பணியை மேற்கொள்வா். தற்போது பாம்பன் தெற்குவாடி மீன் இறங்கு தளத்தில் படகுகள் கரைக்கு கொண்டு வரப்பட்டு சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.