ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் மத்திய அரசைக் கண்டித்து, வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.
பாரத ஸ்டேட் வங்கி முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், பல்வேறு தொழிலாளா் சங்கங்கள் பங்கேற்றன. இந்தப் போராட்டத்துக்கு விவசாய சங்க மாவட்டத் தலைவா் முத்துராமா் தலைமை வகித்தாா் .
இதில் 44 தொழிலாளா் நலச் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்றம் செய்தது, நிதி ஒதுக்கீடு தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. இதைடுத்து, போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவா்களைக் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் அங்குள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.