திருவாடானை அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் வங்கிப் பாதுகாவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகேயுள்ள மேட்டுசோழந்தூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பிரம்மதாஸ் (30). இவா், தனியாா் வங்கியில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் சனிக்கிழமை மாலை ஆா்.எஸ்.மங்கலம் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பியபோது, வடவயல் கிராமத்தில் உள்ள சாலை விபத்துத் தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரம்மதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருப்பாலைக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.