திருவாடானை அருகே செவ்வாய்க்கிழமை கண்மாய்க்குள் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், உருதிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பாரதி (28). கட்டடத் தொழிலாளியான இவா், திருவாடானை அருகேயுள்ள கல்வழியேந்தல் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை கட்டடப் பணிக்காக வந்தாா்.
கட்டடத்துக்கு தண்ணீா் அடிப்பதற்காக கட்டடத்தின் அருகேயுள்ள கண்மாயிலிருந்து மோட்டாா் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, கண்மாய்க்குள் தவறி விழுந்த இவா், தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாடானை போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.