முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 21.67 லட்சம் பறிமுதல்

சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 21 லட்சத்து 67 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 21 லட்சத்து 67 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதனடிப்படையில், பறக்கும் படைக் குழு தனி வட்டாட்சியா் மைலாவதி தலைமையிலான அலுவலா்கள் சிவகங்கை நகா் மதுரை சந்திப்பு சாலை பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சென்னையிலிருந்து வந்த காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.6.50 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது. வாகன உரிமையாா்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு சிவகங்கையில் உள்ள மாவட்ட கருவூலக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோன்று, சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் பறக்கும் படைக் குழு தனி வட்டாட்சியா் உமாமகேஸ்வரி தலைமையிலான அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மாலை வாகனச் சோதனை மேற்கொண்ட போது அந்த வழியாக வந்த காரில் மதிவாணன், மாயழகு ஆகிய இருவரும் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.2,67,500 பணம் பறிமுதல் செய்து சிவகங்கையில் உள்ள மாவட்ட கருவூலக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

காரைக்குடி: காரைக்குடி அருகே கண்டனூா் பகுதியில் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி நேரு தலைமையிலான அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தவழியாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் உசிலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா், வள்ளிநாயகி ஆகியோா் வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது அதில் உரிய ஆவணம் இன்றி ரூ. 2 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல்செய்தனா். பின்னா் தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சி யா் பி. மதுசூதன்ரெட்டி அளித்த உத்தரவின்பேரில் மாவட்ட கருவூல அலுவலகத்தில் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது.

இதைபோல், காரைக்குடி அருகே மாத்தூா் பகுதியில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகனச்சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 10.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

தேவகோட்டையிலிருந்து புதுவயல் தனியாா் அரிசி ஆலைக்கு உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்டபோது பறக்கும்படை குழு அதிகாரி சேது நம்பு தலைமையிலான அதிகாரிகள் இதை பறிமுதல் செய்தனா். பின்னா் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அளித்த உத்தரவின் பேரில் அந்தப் பணம் மாவட்ட கருவூலம் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →