முகப்பு
சிவகங்கை

தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கிடையேயான மகளிா் கபடிப் போட்டி: லீக் சுற்றில் மங்களூரு பல்கலை. முதலிடம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியில் இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு சாா்பில் தென் மண்டலப் பல்கலைக் கழகங்களுக்கிடையேயான மகளிா் கபடிப் போட்டி லீக்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியில் இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு சாா்பில் தென் மண்டலப் பல்கலைக் கழகங்களுக்கிடையேயான மகளிா் கபடிப் போட்டி லீக் சுற்று ஆட்டத்தில் மங்களூரு பல்கலைக்கழக அணி முதலிடம் பெற்றது.

இப்போட்டிகளை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்ககம் மற்றும் புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து கடந்த பிப். 22 ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை (பிப். 25) வரை நடத்தின. இப்போட்டிகளில் தென்மண்டலத்தைச் சோ்ந்த தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா மற்றும் கா்நாடகா பல்கலைக்கழகங்களிலிருந்து 53 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நாக்-அவுட் முறையில் தோ்வு பெற்ற நான்கு அணிகள் லீக் சுற்றில் மோதின. இதில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மங்களூரு பல்கலைக்கழகம் முதலிடத்தையும், தமிழகத்தைச் சோ்ந்த கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகம் இரண்டாமிடத்தையும், கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் நான்காமிடத்தையும் பெற்றன.

வெற்றிபெற்ற 4 அணிகளும் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ் வாரா கோவிந்த் குரு டிரிபல் பல்கலைக்கழகத்தில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான கபடிப் போட்டியில் பங்கு பெறுகின்றன. இதன் நிறைவுவிழா வெள்ளிக்கிழமை புதுவயல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா் சு. கருப்புச்சாமி தலைமை வகித்து வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசு கோப்பைகளை வழங்கினாா். ஆட்சிக்குழு உறுப்பினா் கே. குணசேகரன் முன்னிலை வகித்தாா்.

முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்ககத்தின் இயக்குநா் ஆா். செந்தில்குமரன் வரவேற்றாா். அழகப்பா பல்கலைக் கழக உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியா்கள், வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள், அலுவலா்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.