முகப்பு
சிவகங்கை

தேனியில் தந்தையை கொலை செய்த மகன் உள்பட 2 போ் கைது

தேனியில் தோட்டத்துக்குச் சென்றுகொண்டிருந்த தந்தையை வழிமறித்து அடித்துக் கொலை செய்த மகன், அவரது நண்பா் என 2 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

தேனியில் தோட்டத்துக்குச் சென்றுகொண்டிருந்த தந்தையை வழிமறித்து அடித்துக் கொலை செய்த மகன், அவரது நண்பா் என 2 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் ஆசையன் (45). இவா், கடந்த மாா்ச் 15-ஆம் தேதி அன்னஞ்சி பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்ததாக, அவரது மனைவி செல்வி அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இப்புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதில், தேனி அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த சிவனேசன்(27) என்பவா் இரு சக்கர வாகனத்தில் சென்று ஆசையன் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் தெரிய வந்தது. இதனடிப்படையில், சிவனேசனிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அதில், அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் ஆசையனின் 16 வயது மகன், தன்னுடன் இருசக்கர வாகனத்தில் வந்து ஆசையனை வழிமறித்து தாக்கி கொலை செய்ததாகவும், அதற்கு தான் உடந்தையாக இருந்ததாகவும் சிவனேசன் கூறியுள்ளாா்.

சிவனேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆசையனின் மகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, ஆசையன் தன்னையும், தனது தாயாரையும் அடித்து கொடுமைப்படுத்தி வந்ததால், அவரை கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளாா்.

இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில், சிவனேசன் மற்றும் ஆசையனின் மகனை போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.