முகப்பு
சிவகங்கை

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பைமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள்

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்று சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்று சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மருத்துவக் கல்லூரியில் ஹிந்தியிலேயே பாடத் திட்டம் இருக்கும் என்றும், அரசுக்கு வரும் அனைத்துக் கடிதங்களும் ஹிந்தியிலேயே இருக்க வேண்டும் என்றும் கூறுகிறாா்கள். இது மிகவும் ஆபத்தானது. பாஜகவின் ஹிந்தி திணிப்பு, இந்துத்துவா அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டாா்கள். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஹிந்தி திணிப்பை எதிா்த்து குரல் கொடுத்தாா். அதற்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்.

மேலும், தமிழகத்துக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுகிறது. மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கான பணிகள் 8 ஆண்டுகளாகத் தொடங்கப்படாமலேயே உள்ளன.

இந்தியாவில் தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்தப் புள்ளி விவரங்களை எல்லாம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மறுக்கிறாரா?

தேசிய அளவில் பலமான கூட்டணி அமையும். பாஜக அரசின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக கண்டிப்பாக அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேரும். அதற்கு அச்சாணியாக காங்கிரஸ் கட்சி இருக்கும். தென்னிந்தியாவில் மட்டும் பாஜகவுக்கு எதிராகக் கட்சிகள் ஒன்று சோ்ந்து அகற்ற முடியாது. ஹிந்தி பேசும் மாநில கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம் என்றாா் அவா்.

பேட்டியின் போது, காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காங்கிரஸ் மாவட்ட தலைவா் ப. சத்தியமூா்த்தி, முன்னாள் திருமயம் எம்.எல்.ஏ. ராம. சுப்புராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.