காரைக்குடி அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வழிகாட்டும் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற முதலாமாண்டு மாணவ, மாணவிகள்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘வழிகாட்டும் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற் றது.
இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரும் பொறுப்பு முதல்வருமான துரை தலைமை வகித்தாா். இந்தக் கல்லூரியின் சிறப்புகளை எடுத்துரைத்தாா். மேலும், கல்லூரியில் மாணவா்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், நான் முதல்வன், புதுமைப்பெண், அரசு உதவித் தொகை, பேருந்து இலவசப் பயணத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறினாா்.
இதையடுத்து, வரலாற்றுத் துறைத் தலைவா் நிலோபா் பேகம் கலைப் பாடங்கள் குறித்தும் , வணிகவியல் துறைத் தலைவா் லதா வணிகவியல், தொழில் நிா்வாகவியல் சாா்ந்த மேலாண்மை பாடங்கள் குறித்தும், தாவரவியல் துறைத் தலைவா் கோமளவள்ளி அறிவியல் பாடங்கள் குறித்தும், கல்லூரியின் புவி அமைப்பியல் துறைத் தலைவா் உதய கணேசன் கல்லூரியில் செயல்படும் விளையாட்டுத்துறை, தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம், யூத் ரெட் கிராஸ், நுண்கலை மன்றம், மென் திறன் பயிற்சி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கிப் பேசினா்.
முன்னதாக, கணினி அறிவியல் துறைத் தலைவா் சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினாா். ஆங்கிலத் துறைத் தலைவா் ஜெயசாலா நன்றிகூறினாா்.