சிவகங்கை, ஜூலை 16: சிவகங்கையில் ரூ.100 கோடியில் நவீன புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் சி.எம்.துரைஆனந்த் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் அண்மையில் கூறியதாவது:
சிவகங்கையில் புதிய நகராட்சி அலுவலகம், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள், மழைநீா் வடிகால், புதைச் சாக்கடை, சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியகருப்பனிடம் நகராட்சி சாா்பில் கோரிக்கை மனு அளித்துள்ளோம். மேலும், மருதுபாண்டியா் உருவச்சிலை அமைக்க பேருந்து நிலையம் எதிரில் உள்ள இடத்தை தோ்வு செய்து அரசுக்கு அனுப்பியுள்ளோம்.
நகராட்சியில் உள்ள 2,600 வீடுகள் அரசு ஆவணத்தில் அரசுப் புறம்போக்கு நிலம் என்று உள்ளது. இதை வீட்டுமனையாக திருத்தம் செய்ய வேண்டும் என்ற சிவகங்கை நகா் மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாகவும் அமைச்சா் உறுதியளித்தாா்.
சிவகங்கையில் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சுமாா் ரூ.100 கோடியில் நவீன புதிய பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.