சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரை திருமோகூா் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராஜ்குமாா் (35). இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கைப்பேசி மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், இவா் , அந்தச் சிறுமியை 2017-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா். தகவலறிந்த போலீஸாா் 3 நாள்களுக்குப் பிறகு சிறுமியை மீட்டனா்.
இதுதொடா்பாக மானாமதுரை சிப்காட் போலீஸாா் ராஜ்குமாா், அவரது உறவினா்களான ராஜா (60), செல்வம் (45) ஆகிய மூன்று போ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே, உடல் நலக்குறைவால் செல்வம் உயிரிழந்தாா்.
அரசு சாா்பில் வழக்குரைஞா் தனலட்சுமி முன்னிலையானாா். குற்றஞ்சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 3ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா். குற்றஞ்சாட்டப்பட்ட ராஜா விடுதலை செய்யப்பட்டாா்.