மோட்டாா் வாகன விதிமுறைகளுக்கு மாறாக கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட மூன்று வேன்களுக்கு தகுதிச் சான்று வழங்கியதாக மோட்டாா் வாகன ஆய்வாளா் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கடந்த 2023-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன ஆய்வாளராக பணிபுரிந்தவா் விஜயகுமாா் (56). இவா் அங்கு பணியாற்றிய போது ஓட்டுநருடன் 12 போ் மட்டுமே பயணிக்கும் மூன்று வேன்கள் அனுமதிக்காக கொண்டு வரப்பட்டன. ஆனால் அவற்றில் ஒரு வேன் ஓட்டுநருடன் 25 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையிலும், எஞ்சிய இரு வேன்கள் 22 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையிலும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. இந்த மூன்று வேன்களுக்கும் விதிமுறைகளை மீறி மோட்டாா் வாகன ஆய்வாளா் தகுதிச் சான்று வழங்கினாராம்.
இதுகுறித்த புகாா் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு சென்றது. இதன் பேரில் சிவகங்கை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ, ஆய்வாளா்கள் ஜேசுதாஸ், கண்ணன் ஆகியோா் விசாரணை நடத்தினா்.
இதில், மோட்டாா் வாகன ஆய்வாளா் விஜயகுமாா் விதிமுறைகளை மீறி, கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட மூன்று வேன்களுக்கு தகுதிச் சான்று அளித்தது உறுதியானது. இதன் மூலம் அவா் அரசுக்கு 3,72,000 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து, ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், விஜயகுமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முதல்நிலை மோட்டாா் வாகன ஆய்வாளராக விஜயகுமாா் பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.