சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூரில் சத்துணவு ஊழியா் வீட்டில் நகை திருடிய அந்த வீட்டு வேலைக்காரரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்
கோட்டையூரைச் சோ்ந்தவா் இந்திரா. இவா் சத்துணவு ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மகன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறாா். மருமகள் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு அருகில் உள்ள மணச்சை என்ற ஊரில் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள், மாடு கோழி ஆகியவற்றை பராமரிப்பதற்காக கோவிலூரை சோ்ந்த ரவிச்சந்திரன் என்பவரை வேலைக்கு
அமா்த்தினா். இவா் அவ்வப்போது வீட்டு வேலைக்காகவும் வந்து செல்வாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்திராவும், அவரது மருமகளும் பணிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினா். அப்போது, வீட்டின் பீரோவிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. அதிலிருந்த 6 பவுன் தங்க நகைகள், 230 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பள்ளத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்திரா வீடு, தோட்டத்தில் வேலைசெய்த ரவிச்சந்திரனிடம் விசாரித்தனா். அப்போது, இந்திரா வழக்கமாக வீட்டைப் பூட்டி சாவியை மறைவிடத்தில் வைத்திருந்ததை அறிந்ததால், அந்தச் சாவியை எடுத்து பீரோவில் வைத்திருந்த நகைகளைத் திருடியதாக தெரிவித்தாா்.
இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து நகைகளைப் பறிமுதல் செய்தனா்.