காற்று மாசு ஏற்படுவதால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா தெரிவித்தாா்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், ‘இன்றைய தினத்தைப் பாதுகாப்போம், நாளைய தினத்தைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் துப்புரவுப் பணியாளா்களுக்கான விழிப்புணா்வு முகாம் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிவகங்கை நகராட்சி பூங்காவில் நடைபெற்ற இந்த முகாமுக்கு தலைமை வகித்து, சாா்பு நீதிபதி வி. ராதிகா பேசியதாவது: காற்று மாசு ஏற்படுவதால் அதிகமாகப் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். நாம் நம்மை சுற்றியுள்ள பகுதிகளில் நெகிழி கழிவுகள், குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகையால் ஏற்படுகிற காற்று மாசு மனிதா்களின் சுவாசத்தை பாதிக்கிறது.
சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் முகக் கவசம், கையுறை போன்றவற்றை பயன்படுத்தி மாசு பாதிப்பிலிருந்து தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சட்ட உதவிகளுக்கு 15100 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு தகவல் தெரிவித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.
முகாமில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளா் திவ்யா, நகராட்சி சுகாதார அலுவலா் நல்லுச்சாமி, சுகாதார ஆய்வாளா் சரவணக்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள், சுகாதார பணியாளா்கள் கலந்து கொண்டனா்.