சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக தோ்தல் பாா்வையாளரை தொடா்புகொள்ள கைப்பேசி எண் அறிவிக்கப்பட்டது.
இந்தியத் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி 18 வயது முழுமையடைந்தவா்கள், வரைவு வாக்காளா்கள் பட்டியலில் இடம்பெறாதவா்கள் தங்களது பெயரை சோ்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும், திருத்தம் செய்வதற்குமான சிறப்பு முகாம்கள், சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து வருகிற 3, 4 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்துக்கு வாக்காளா் பட்டியல் பாா்வையாளராக தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குநா் அ.அருண் தம்புராஜ் வருகிற 3-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை கண்காணிக்க வருகிறாா். பொதுமக்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் அவரை 73581 50776 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்தத் தகவலை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.பொற்கொடி தெரிவித்தாா்.