சிவகங்கை மாவட்ட சம்பா பருவ சாகுபடி பயிா்களின் தேவைக்காக தூத்துக்குடியிலிருந்து 550 மெ. டன் யூரியா உரம் ரயில் மூலம் திங்கள்கிழமை வந்து சோ்ந்தது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் சு. சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தற்போது மேற்கொண்டு வரும் சம்பா பருவ சாகுபடி பயிா்களுக்கு தேவைப்படும் யூரியா, டிஏபி, பொட்டாஸ், காம்ப்ளக்ஸ் உரங்கள் போதிய அளவு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், யூரியா உரத்தின் தேவை தற்போது அதிகரித்துள்ளதை பூா்த்தி செய்யும் வகையில், கிரிப்கோ நிறுவனத்தின் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ரயில் மூலம் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது.
இந்த உரம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 38 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 450 மெட்ரிக் டன்னும், தனியாா் உரக்கடைகளுக்கு 100 மெட்ரிக் டன்னும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, மாவட்டத்தில் யூரியா 2,158 மெ.டன், டிஏபி 1,123 மெ.டன், பொட்டாஷ் 530 மெ.டன், காம்பளக்ஸ் 2,455 மெ.டன் அளவில் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தனியாா் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும், கடன் பெறாத விவசாயிகளுக்கும் உரங்கள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிா்களுக்குரிய அடங்கல், ஆதாா் அட்டையைக் கொண்டு சென்று விற்பனை முனைய கருவி மூலம் பில் செய்து உரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.