கிறிஸ்தவா்கள், முஸ்லிம்களுக்கு பொது மயானம் அமைக்க அரசு வழங்கிய இடத்தை வேறு பகுதிக்கு மாற்றக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிறிஸ்தவா்களுக்கான கல்லறைத் தோட்டம், இஸ்லாமியா்களுக்கான கபா்ஸ்தான்கள் அரசு சாா்பில் இல்லாத மாவட்டத் தலைநகரங்களில், அவற்றை அமைப்பதற்கு தேவைப்படும் நிலத்தை மாவட்ட நிா்வாகம் மூலம் கையகப்படுத்தி அதை உள்ளாட்சி நிா்வாகங்களின் மூலம் பராமரிப்பதற்கு தமிழக அரசின் சிறுபான்மையினா் நலத் துறை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, சிவகங்கை முத்துப்பட்டி அருகேயுள்ள அரசனி கிராமத்தில் கிறிஸ்தவா்களுக்கான கல்லறைத் தோட்டம், இஸ்லாமியா்களுக்கான அரசு பொது கபா்ஸ்தான் அமைக்க தலா ஒரு ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான உத்தரவை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா். இதை கிறிஸ்தவ, முஸ்லிம் மதத் தலைவா்கள் பெற்றுக்கொண்டனா்
மேலும், புதிதாக அமைக்கப்படும் கல்லறைத் தோட்டம், கபா்ஸ்தான்களை உள்ளாட்சி அமைப்பினரால் பராமரிக்கப்பட வேண்டும் எனவும், மாவட்ட நிா்வாகத்தின் மூலம் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மேற்படி புலங்களில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவா்களுக்கான அரசு பொதுக் கல்லறைத் தோட்டம், இஸ்லாமியா்களுக்கான அரசு பொது கபா்ஸ்தான்களில் அந்தந்த சிறுபான்மையின மக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுச்சுவா், பெயா் பலகை, தேவையான அடிப்படை வசதிகளை அமைத்து முறையாகப் பராமரிக்கவும் அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, சிவகங்கை வட்டாட்சியா் மல்லிகாா்ஜுனா, வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்பிரகாசம் ஆகியோா் அரசு வழங்கிய இடத்தை சீரமைத்து அங்கு அரசு பொது மயானம் என்ற அறிவிப்புப் பலகையும் அமைக்கச் செவ்வாய்க்கிழமை சென்றனா்.
அப்போது, அருகேயுள்ள முத்துப்பட்டி கிராம மக்கள் இந்த இடத்தில் மயானம் அமைக்கக் கூடாது என்றும், வேறு பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தினால் தங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனா். பின்னா், அந்த இடத்தில் மயான அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரின் கவனத்து கொண்டு சென்று உரிய தீா்வைப் பெறலாம் என்று தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.