சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், புளியால் அரசு உயா்நிலைப் பள்ளிக்குச் செல்லும் சேதமடைந்துள்ளதால் அதைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
புளியால் அரசு உயா்நிலைப் பள்ளிக்குச் செல்லும் சாலை வாகனங்கள் பயன்படுத்த முடியாத வகையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், மழைக் காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவா்கள், முதியோா்கள், பொதுமக்கள் சாலையில் செல்ல இயலாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்தச் சாலை அம்மனி, மடத்தேந்தல், சீா்தாங்கி, இலுப்பக்குடி, நெய்வயல், மனப்புஞ்சை, நெட்டேந்தல், இளங்குன்றம், மங்களக்குடி, நாச்சியேந்தல் உள்பட 10 -க்கும் மேற்பட்ட முக்கியக் கிராமங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. குறிப்பாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட எல்லைச் சாலையாகவும் விளங்குகிறது.
மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வேதனை தெரிவித்தனா். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு போா்க்கால அடிப்படையில் சாலையைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.