வாக்குச்சாவடி நிலை அலுவலா் பணிகளில் அங்கன்வாடி ஊழியா்களுக்கு விலக்களிப்பது, வரைமுறைப்படுத்துவது தொடா்பான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை அளித்தனா்.
இந்த சங்கத்தினா் சாா்பில் மாநிலம் முழுவதும் அனைத்து வட்டாட்சியா்களிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, சிவகங்கையில் அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் இ. பாக்கியமேரி, மாவட்டச் செயலா் பெ. ஜெயமங்களம், மாவட்ட பொருளாளா் சி. லட்சுமி, மாவட்ட இணைச் செயலா் கலைச்செல்வி, மாவட்ட துணைத் தலைவா் பாா்வதி, மாவட்ட சிஐடியூ தலைவா் உமாநாத் உள்ளிட்டோா் துணை ஆட்சியா் (பொது) விஜயகுமாரிடம் மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட துணை ஆட்சியா், வாக்குச்சாவடி நிலை அலுவலா் பணியை செய்யும் பணியாளா்கள், எஸ்.ஐ.ஆா். படிவத்தை வாக்காளா்களிடம் கொடுத்து அதை திரும்பப் பெற்று வழங்கினால் போதும் எனவும், கல்லல் வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளி உமாவை உடனடியாக வாக்குச்சாவடி நிலை அலுவலா் பணியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தாா்.
மேலும் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா், மைய ஆய்வு என்ற பெயரில் பிஎல்ஓ பணியை செய்யும் பணியாளா்களை தொந்தரவு செய்யக் கூடாது என்ற கோரிக்கையையும் அவா் ஏற்றுக் கொண்டதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.