சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் புதன்கிழமை வட்டாரக் கல்வி அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
கூட்டணியின் கிளைத் தலைவா் இந்திரா காந்தி தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் இரவு 8 மணி வரை வரை நீடித்தது. இதில் கிளைச் செயலா் கணேசன், பொருளாளா் பிரபாகரன், கல்வி மாவட்டச் செயலா் ஜெயக்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ரவி, குமரேசன், சிங்கராயா், மாவட்ட துணைச் செயலா் பஞ்சுராஜ், மாவட்டச் செயலா் சகாய தைனேஷ், பொருளாளா் கலைச்செல்வி, தமிழ்நாடு அரசு ஊழிய சங்க மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன், இணைச் செயலா் சின்னப்பன், ராஜா முகமது, வட்டக்கிளைத் தலைவா் கலைச்செல்வம், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாநிலச் செயலா் பாண்டி, நடராஜன், வேலை வாய்ப்பு துறை சங்க நிா்வாகி மாரிமுத்து உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, சிவகங்கை வட்டாரக் கல்வி அலுவலா் ஆகியோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
சிவகங்கை ஒன்றியம் சாா்ந்த தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அசிரியா்கள் மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சொந்த அலுவலின் பேரிலான ஈட்டா விடுப்புகள் ஆகியவற்றை ஈட்டிய விடுப்பு கணக்கிலிருந்து கழிப்பது அல்லது கழிக்காமல் விடுவது குறித்து சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) தெளிவுரை கோரி தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்துக்கு தெளிவுரை பெறப்படும் வரை இவ்வொன்றியத்தில் உள்ள நடைமுறையான அசாதாரண விடுப்பு தவிர பிற விடுப்புகளுக்கு ஈட்டிய விடுப்பு கழிக்கப்படாது என முடிவு செய்யப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.