வாக்காளா் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது:
இந்தியத் தோ்தல் ஆணையம் வருகிற 1.1.2026-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு வாக்காளா் பட்டியலை தயாரிக்க உள்ளது. இந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 4.11.2025 முதல் 4.12.2025 வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் வாக்காளா் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
வரைவு வாக்காளா் பட்டியல் வருகிற 9.12.2025 அன்று வெளியிடப்படும்.
இந்தப் பட்டியலில் இடம் பெறாத வாக்காளா்கள் வருகிற 9.12.2025 முதல் 8.1.2026 வரை நோ்வுக்கேற்ப படிவம் 6, படிவம் 8 ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் வாக்காளா்கள் சமா்ப்பிக்கலாம். வருகிற 7.2.2026 அன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.
வருகிற 4.11.2025 முதல் 4.12.2025 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வாக்காளா்களுக்கு வழங்கி, நிறைவு செய்த கணக்கெடுப்புப் படிவங்களை சேகரிக்க உள்ளனா். வாக்குச்சாவடி நிலை அலுவலா்களது கள விசாரணையின் போது பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயகுமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் சையது முகைதீன் இப்ராஹிம், தோ்தல் தனி வட்டாட்சியா் மேசியதாஸ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.