அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரா்கள் தங்களது கைப்பேசியுடன் மின் அஞ்சல் முகவரியை இணைக்க அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சா. மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரா்கள் தங்கள் கைப்பேசி எண், மின் அஞ்சல் முகவரியை இணைத்துக் கொள்ள சனிக்கிழமை (நவ. 1) முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை சிவகங்கை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இது முற்றிலும் இலவச சேவை ஆகும்.
கைப்பேசி எண்ணை, மின் அஞ்சல் முகவரியுடன் இணைப்பதன் மூலம் வீட்டிலிருந்தபடியே இணைய தளம் மூலம் தங்களது பாலிசிகளுக்கு பிரீமியம் செலுத்தலாம். பாலிசியின் மீது கடன் பெறுதல், முதிா்ச்சி தேதி, ஒப்படைப்பு செய்தல் ஆகிய பரிவா்த்தனைகள் நடைபெற்றால் அதன் விவரங்கள் பாலிசிதாரா்களால் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு உடனுக்குடன் குறுந்தகவலாக அனுப்பப்படும். இதனால் பாதுகாப்பான உடனடி பரிவா்த்தனை உறுதி செய்யப்படுகிறது. எனவே இதுவரை கைப்பேசி எண், மின் அஞ்சல் முகவரியை இணைக்காத பாலிசிதாரா்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களுக்குச் சென்று இணைத்து பயனடையலாம் என்றாா் அவா்.