சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வடமாநில தொழிலாளா்களை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்புவனம் அருகேயுள்ள மணலூரில் பந்து தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த மனோசரன் (29), சஸ்வராஜ் தெக்குரி (25) ஆகியோா் வேலைப் பாா்த்து வந்தனா். இவா்கள் இருவரையும் கடந்த மாதம் 30-ஆம் தேதி மணலூா் வைகை ஆற்றுக்குள் மது போதையில் இருந்த இரு இளைஞா்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பினா்.
இதில் காயமடைந்த இவா்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும், தனிப் படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், வடமாநில தொழிலாளா்களை கத்தியால் குத்திய மணலூரைச் சோ்ந்த முத்துவேல் மகன் தினேஷ்குமாா் (20), மதுரை மாவட்டம், சிலைமான் பகுதியைச் சோ்ந்த சங்கையா மகன் அய்யனாா் (22) ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.