சிவகங்கை அருகே காட்டு நெடுங்குளம் கிராமத்தில் இயங்கி வந்த நியாய விலைக் கடையை வேறு ஊருக்கு மாற்றியதைக் கண்டித்து பொங்கல் தொகுப்பை வாங்க மறுத்து கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காட்டு நெடுங்குளம் கிராமத்தில் சுமாா் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த நியாய விலைக் கடையை கிராம மக்களிடம் கருத்து கேட்காமல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 7 கி.மீ. தொலைவில் உள்ள வேம்பங்குடி கிராமத்துக்கு மாற்றப்பட்டது.
இந்தப் பகுதியில் 180 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், 100-க்கும் குறைவான குடும்ப அட்டைகள் உள்ள வேம்பங்குடி கிராமத்துக்கு நியாய விலைக் கடையை மாற்றம் செய்ததாகக் தெரிவித்தனா். இதனால், குடிமைப் பொருள்கள் வாங்க 7 கி.மீ. தொலைவுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காட்டு நெடுங்குளம் கிராம மக்கள், நியாய விலைக் கடை மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி, குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, கிராம மக்கள் பொங்கல் தொகுப்பை புறக்கணித்து நியாய விலைக் கடை முன்பு சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த வருவாய்த் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நியாய விலைக் கடை மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்வதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனா்.