சிவகங்கை மாவட்டம், பூவாளி கிராமத்தில் அதிமுக சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக வடக்கு ஒன்றியம் சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஊத்திக்குளம் முதல் பூவாளி கிராமம் வரை மூன்று பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 73 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
7 கி.மீ. பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 18 ஜோடிகளும், 5 கி.மீ. பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறிய மாடு பிரிவில் 38 ஜோடிகள் பங்கேற்றன. 4 கி.மீ. பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பூஞ்சிட்டு மாடு பிரிவில் 17 ஜோடிகள் பங்கேற்றன.
இந்தப் போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பந்தயத்தை பூவாளி, நெடுங்குளம், செங்குளம், ஊத்திக்குளம், காட்டுப்புளி, சலுகைச்சாமிபுரம், செம்பனூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனா்.