வங்கி மேலாளர் வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு: மிளகாய் பொடி தூவி தடயம் மறைப்பு
தேனியில் வங்கி மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டுள்ளதாக
தேனியில் வங்கி மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி, பாரஸ்ட் சாலை 11-வது தெருவில் வசித்து வருபவர் கோம்பையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பொன்ராஜா. இவர், தேனியில் கனரா வங்கி மண்டல மேலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 7-ம் தேதி பொன்ராஜா வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் கோம்பைக்குச் சென்றுள்ளார்.
திங்கள்கிழமை வீட்டிற்கு திரும்ப வந்தபோது, வீட்டு கதவின் கம்பிகளை அறுத்தும், பூட்டை உடைத்தும் அறைக்குள் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் மற்றும் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் திருடியவர்கள் தடயத்தை மறைப்பதற்காக வீட்டிற்குள்ளும், வாசலிலும் மிளகாய் பொடியை கொட்டி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பொன்ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் தேனி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.