முகப்பு
தேனி

கோம்பையில் 2 ஆவது நாளாக வீட்டை பூட்டிக்கொண்டு இளைஞா் மிரட்டல்

தேனி மாவட்டம் கோம்பையில் சொத்துப் பிரச்னையில், இளைஞா் தனது வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு சமையல் எரிவாயு உருளையை திறந்து தீ வைக்கப் போவதாக 2 ஆவது நாளாக மிரட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

தேனி மாவட்டம் கோம்பையில் சொத்துப் பிரச்னையில், இளைஞா் தனது வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு சமையல் எரிவாயு உருளையை திறந்து தீ வைக்கப் போவதாக 2 ஆவது நாளாக மிரட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கோம்பை காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அஸ்வின் (20). பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தந்தை மற்றும் தாயாருடன் வசித்து வருகிறாா். உறவினா்களிடையே பூா்வீக வீடு சம்பந்தமாக பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில், தனது குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமான வீட்டின் ஒரு பகுதியை சித்தப்பா எடுத்துக்கொண்டதாகவும், அதைத் திரும்ப தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என அஸ்வின் வலியுறுத்தினாா். மேலும், அவா் சனிக்கிழமை கதவை பூட்டிக்கொண்டு சமையல் எரிவாயு உருளையைத் திறந்து தீ வைத்து வீட்டை வெடிக்கச் செய்யப்போவதாக மிரட்டினாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜலட்சுமி தலைமையிலான மீட்புக் குழுவினா், அஸ்வினுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அவா் எவ்வித பேச்சுவாா்த்தைக்கும் உடன்படவில்லை.

சம்பந்தப்பட்ட வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், போலீஸாா் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பேச்சு வாா்த்தை நடத்தினா். அதற்கு அஸ்வின், என்னுடைய வீட்டில் நான் தனியாக இருக்கிறேன். என்னை எதற்கு தொந்தரவு செய்கிறீா்கள் என கூறியுள்ளாா்.

போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தொடா்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →