இந்தியாவை நோக்கி வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 2 இந்தியர்கள் உயிரிழப்பு
தாக்குதலில் 2 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
துபை: உலகின் மிகமுக்கிய கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற, இந்தியாவை நோக்கி வந்த தாய்லாந்து நாட்டின் வணிகக் கப்பல் மீது ஈரான் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 2 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. "ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலும் குறிவைக்கப்படும்' என்று அந்நாடு ஏற்கெனவே எச்சரித்துள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் காண்ட்லா துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த தாய்லாந்தின் "மயூரி நாரீ' சரக்குக் கப்பல் ஹோர்முஸ் நீரிணையை புதன்கிழமை கடக்க முயன்றபோது, அதை ஈரான் ஏவுகணை வீசி தாக்கியது. இதில் கப்பலின் என்ஜின் அறையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
ஓமன் கடற்படையினர் 20 பேரை மீட்ட நிலையில், என்ஜின் அறையில் 3 மாலுமிகள் சிக்கினர்.
இதில் 2 இந்தியர்கள் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாயமான மற்றொருவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த ஜப்பான், மார்ஷல் தீவு நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 14 வணிகக் கப்பல்கள் ஈரானால் தாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கண்டனம்: மயூரி நாரீ கப்பல் மீதான தாக்குதலைக் வன்மையாகக் கண்டித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், "மத்திய கிழக்கு மோதலில் வணிகக் கப்பல்கள் இலக்காக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது தாக்குதல்களின் தீவிரம் அதிகரிப்பது அச்சமளிக்கிறது.
கடல்சார் வணிகப் போக்குவரத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்பாவி மாலுமிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதும், சர்வதேச கடல்வழிப் பாதைகளைத் தடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசர கால இருப்பை வெளியிட ஐஏஇ பரிந்துரை
ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், 1970-களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய எரிசக்தி விநியோகத் தடையால் உலக நாடுகள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
இந்த நிலைமையைச் சமாளிக்க 40 கோடி பீப்பாய் அவசர கால எண்ணெய் இருப்பை சந்தையில் வெளியிட சா்வதேச எரிசக்தி முகமை (ஐஇஏ) உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரைத்துள்ளது. இது ரஷியா-உக்ரைன் போரின்போது விடுவிக்கப்பட்ட அளவைவிட 2 மடங்கு அதிகமாகும்.