வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்வு: அணைக்கு வரும் உபரிநீர் வெளியேற்றம்
வைகை அணை நீர்மட்டம் செவ்வாய்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு வரும் உபரிநீர் வைகை ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.
வைகை அணை நீர்மட்டம் செவ்வாய்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு வரும் உபரிநீர் வைகை ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஆகியவற்றால் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. கடந்த ஜூலை 4-ம் தேதி அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த ஜூலை 24-ம் தேதி அணை நீர்மட்டம் 68.50 அடியை எட்டிய நிலையில், 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு திங்கள்கிழமை, விநாடிக்கு 900 கன அடியிருந்து 1,867 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கூடுதல் தண்ணீர் வரத்தால், மொத்தம் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம், தற்போது 69 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுப் பணித்துறை சார்பில் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
அணைக்கு விநாடிக்கு 730 கன அடி வரை வரும் உபரிநீரை, அணையிலிருந்து வைகை ஆற்றில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் திறந்து விட்டார். வைகை அணை கட்டப்பட்டு 63 ஆண்டுகளில், 30-வது முறையாக அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அணை நிலவரம் : வைகை அணை நீர்மட்டம் 69 அடி. அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 1,713 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 5,542 மில்லியன் கன அடி. அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் பாசனம் மற்றும் ஆண்டிபட்டி சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 969 கன அடி வீதம் கால்வாய் மூலமும், அணைக்கு விநாடிக்கு 730 கன அடி வரை வரும் உபரிநீர் வைகை ஆற்றிலும் திறக்கப்பட்டுள்ளது.