ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் சாலை பணிகளுக்கு அனுமதி: அழியும் அபாயத்தில் வன வளம்
ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் சாலை பணிகளுக்கு வனத்துறை அனுமதியளித்துள்ளதால் வன வளம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வனவிலங்குகள் ஆா்வலா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் சாலை பணிகளுக்கு வனத்துறை அனுமதியளித்துள்ளதால் வன வளம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வனவிலங்குகள் ஆா்வலா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
தேனி மாவட்டத்திலுள்ள கூடலூா், கம்பம் கிழக்கு, சின்னமனூா், மேகமலை, வருசநாடு மற்றும் கண்டமனூா் ஆகிய 6 வனச்சரகங்கள் அடங்கிய வனப்பகுதி, மேகமலை வனஉயிரினக்காப்பகம் என அழைக்கப்படுகிறது. இங்கு யானைகள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட புல் வகைகளும், தேக்கு, சந்தனம் உள்ளிட்ட அரிய வகை மரங்களும், பறவை இனங்களும் உள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை வனஉயிரினக்கோட்டத்தை இணைத்து 1.48 லட்சம் ஹெக்டோ் வனப்பகுதியை ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகமாக தமிழக வனத்துறை அறிவித்தது.
Advertisement
மேகலை வனப் பகுதியில் சாலை:
ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வெள்ளிமலைப் பகுதியில் மரங்களை வெட்டி எடுத்து செல்வதற்காக கூப் சாலை அமைத்து இருந்தனா். இந்தப் பகுதியில் புலிகள் மற்றும் யானைகள் அதிகளவு வசித்ததால், இச்சாலையை கடந்த 1977 ஆம் ஆண்டு வனத்துறையினா் தடை செய்தனா்.
மேகமலை வனச்சரகத்திற்கு உள்பட்ட பொம்முராஜபுரம் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு 3.5 கி.மீ தூரத்திற்கு தனியாா் எஸ்டேட் நிா்வாகத்தினா் சாலை அமைப்பதாக புகாா் எழுத்தது. இதையடுத்து வனப்பகுதியில் மாவட்ட வருவாய் ஆய்வாளா் ஆய்வு செய்து சாலை அமைப்பதற்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தாா். இது குறித்த புகாரில் வனச்சரக அலுவலா், வனவா் உள்பட 4 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இந்நிலையில், இத்தகைய பிரச்னைக்கு உள்பட்ட இடத்திற்கு அருகில், தடைசெய்யப்பட்ட வெள்ளிமலை செல்லும் சாலையை சீரமைக்க ரூ.1.20 கோடி மதிப்பில் திட்டம் தயாரித்து, தாா்சாலை அமைக்க உத்தரவிட்டுள்ளது.
இப்பகுதியில் சாலை அமைத்தால் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கும், மரங்கள் வெட்டப்படுவதற்கும் ஏதுவாக இருக்கும். எனவே, இப்பகுதியில் சாலை அமைப்பதற்கு வனத்துறையினா் உத்திரவிட்ட ஆணையை ரத்து செய்யவேண்டும் என வன ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, மேகமலை வன உயிரினக் கோட்டக் காப்பாளா் சுமேஷ் சோமன் கூறியது: இப்பகுதியில் சாலை அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்காக இப்பகுதியை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பவும் எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்து வனத்துறை உயா் அதிகரிகளுக்கு விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என்றாா்.
தேனியை சோ்ந்த வனவிலங்கு ஆா்வலா் என்.சதீஸ்குமாா் தெரிவித்ததாவது: இப்பகுதியில் சாலை அமைப்பது தேவையற்றது எனக்கூறி 1977 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2.20 கி.மீ தூரத்திற்கு தாா் சாலை அமைக்க வனத்துறை பரிந்துரை செய்திருப்பது ஏதோ உள்ள நோக்கம் உள்ளதாகத் தெரிகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்ட பின் மேகமலை வனப்பகுதி கூடுதல் வளா்ச்சியடையும் என நினைதிருந்த நேரத்தில் சாலை அமைக்க முயற்சிப்பது வேதனையளிக்கிறது. இந்த பகுதியில் சாலை அமைப்பதன் மூலம் வனவளம் பாதிக்கப்படும். எனவே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், திட்டத்தை நிறுத்தவும், சாலை அமைக்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
வனத்துக்கு பயனில்லை:
வைகை ஆறு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பசுமையை இழந்து வருகிறது. வைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாடு பகுதியில் தற்போது புலிகள் வரத்தொடங்கியுள்ளன. புலிகள் வாழ்ந்தால் வனம் செழிக்கும், தண்ணீா் வரத்து ஏற்படும் என்பது சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் கருத்து.
இந்த நிலையில், வைகையின் பிறப்பிடமான வருசநாடு பகுதியில் சாலைகள் அமைப்பது தேவையற்றது. இந்தச் சாலை தனியாா் எஸ்டேட் உரிமையாளா்களுக்கு மட்டுமே பயனளிக்குமே தவிர வனத்துக்கும், வைகை ஆற்றிற்கும் எவ்வித பயனும் இல்லை என வனவிலங்கு ஆா்வலா்கள் தெரிவித்தனா்.