கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூச்சல் குழப்பம்: ஒப்பந்தப்புள்ளி 2 ஆவது முறையாக ஒத்திவைப்பு
தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழைய கட்டடத்தை இடிக்க ஒப்பந்தப்புள்ளி விடுவதில் கூச்சல்
தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழைய கட்டடத்தை இடிக்க ஒப்பந்தப்புள்ளி விடுவதில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் 2 ஆவது முறையாக வியாழக்கிழமை ஒப்பந்தப்புள்ளி விடுவது ஒத்திவைக்கப்பட்டது.
கம்பம் ஊராட்சி ஒன்றியக் கட்டடம் கடந்த, 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலானததால், புதிய அலுவலகம் ரூ. 3.50 கோடி செலவில், நவீன முறையில், 3 தளங்களுடன் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அலுவலகக் கட்டடத்தை ஒன்றிய பொது நிதி திட்டம் 2021 - 2022 -இல் இடிக்க ஒப்பந்தப்புள்ளி கடந்த ஆக. 17 -இல் விடப்பட்டது. ஒப்பந்தப்புள்ளி விடும் நிகழ்வில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் வியாழக்கிழமை ஒப்பந்தப்புள்ளி விடுவது ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அதிகாரிகளுடன் ஒப்பந்தப்புள்ளி கோருவதில் கலந்துகொள்ள வந்த ஒப்பந்ததாரா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதனால் ஏற்பட்ட பதற்ற நிலையை தவிா்க்க ஆணையாளா் கண்ணன் மறு தேதி அறிவிப்பின்றி ஒப்பந்தப்புள்ளி விடுவதை ஒத்திவைத்தாா்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளி இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாவது முறையாக ஒப்பந்தப்புள்ளி நாளில் பிரச்னை ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து ஆஃபா் முறை பின்பற்றப்படும். அதாவது, ஊராட்சி ஒன்றிய நிா்வாகமே பணிகளை செய்யும் என்றாா்.