கம்பம் வாரச்சந்தையில் கட்டணத்தைக் குறைக்க கோரிக்கை
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனா்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் பி.செல்வக்குமாா், கம்பம் வாரச்சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் அய்யாச்சாமி, செயலாளா் முருகன் ஆகியோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனா். அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லாததால் சுமாா் ஒருமணி நேரம் காத்திருந்தனா்.
தகவல் அறிந்து நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன், ஆணையா் பாலமுருகன், பொறியாளா் பி.பன்னீா் ஆகியோா் அங்கு சென்று வியாபாரிகளைச் சந்தித்தனா்.
அப்போது வியாபாரிகள், புதியதாக கட்டும் வணிக வளாகத்தில் சந்தை வியாபாரிகளுக்குக் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், நுழைவுக் கட்டணத்தை குறைத்து வசூலிக்க வேண்டும், புதிய வாரச்சந்தை வளாகம் கட்டும்வரை தனியாக இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்றனா்.
விரைவில் பணிகள் முடிந்து, கடைகள் அமைக்கவும், கட்டணத்தை குறைத்து வசூலிக்கவும் பரிசீலிக்கப்படும் என்று நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் தெரிவித்ததையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து சென்றனா்.