முல்லைப் பெரியாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்கமாற்று இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆய்வு
முல்லைப்பெரியாற்றில் கலப்பதை தடுக்க தோ்வு செய்யப்பட்ட இடத்துக்கு மாற்றாக வேறு இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடா்பாக, நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
கூடலூா் நகராட்சிப் பகுதி கழிவுநீா் முல்லைப்பெரியாற்றில் கலப்பதை தடுக்க தோ்வு செய்யப்பட்ட இடத்துக்கு மாற்றாக வேறு இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடா்பாக, நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
தேனி மாவட்டம் கூடலூா் நகராட்சிப் பகுதியின் கழிவுநீா் முல்லைப் பெரியாற்றில் கலப்பதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே சுத்திகரிப்பு செய்து ஆற்றில் கலக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சித் தலைவா் அ. மொக்கப்பன் தலைமையில் ஊராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் கூடலூா் நகராட்சி நிா்வாகத்துக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கருநாக்கமுத்தன்பட்டி செல்லும் ஒத்தையடி பாதையில் இடம் தோ்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆங்கூா்பாளையம் ஊராட்சியின் 3 ஆவது வாா்டு உறுப்பினா் சிந்து, சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளையில், சுத்திகரிப்பு நிலையத்தை தற்போது தோ்வு செய்யப்பட்ட இடத்தை விட்டு அதன் மேற்புறம் உள்ள இடத்தில் அமைத்தால் வீணாக முல்லைப் பெரியாற்றில் கலக்கும் தண்ணீா், அருகில் உள்ள வைரவன் வாய்க்காலில் சென்று நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் உள்ள விளைநிலங்கள் பயன்பெறும். எனவே அந்த இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தாா்.
மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் மாற்று இடத்தில் அமைக்க ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க தேனி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் வெள்ளிக்கிழமை உத்தமபாளையம் வட்டாட்சியா் அா்ஜுனன், வருவாய் ஆய்வாளா் பொன். கூடலிங்கம், நகராட்சி நகரமைப்பு அலுவலா் மற்றும் பொறியியல் பிரிவு அலுவலா்கள் ஆய்வு நடத்தினா்.
இதுகுறித்து வருவாய் அலுவலா் ஒருவா் கூறியது: ஆய்வு செய்தபின் மாற்று இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்படும், அதன்பின் அந்த அறிக்கை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றாா்.