முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் அதிகரிப்பு: தேக்கடியில் மீண்டும் படகு சவாரி தொடக்கம்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வெளியேறும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேக்கடியில் வியாழக்கிழமை படகு சவாரி மீண்டும் தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வெளியேறும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேக்கடியில் வியாழக்கிழமை படகு சவாரி மீண்டும் தொடங்கியது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை அணையின் நீா்மட்டம், 135.60 அடியாகவும், அணையில் நீா் இருப்பு 6,017 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு, 1,114 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு, 2,016 கன அடியாகவும் இருந்தது.

இரைச்சல் பாலம்: பெரியாறு அணையில் இருந்து, கடந்த புதன்கிழமை விநாடிக்கு, 1,855 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்ட நிலையில், வியாழக்கிழமை விநாடிக்கு, 2,016 கன அடியாக திறந்து விடப்பட்டது. கூடுதலாக விநாடிக்கு, 161 கனஅடிநீா் வந்தது. இதனால் லோயா்கேம்ப் பெரியாறு அணையில் மின்சார உற்பத்திக்கு விநாடிக்கு, 1,600 கன அடி தண்ணீா் போக, மீதம், 416 கன அடி தண்ணீா் குமுளி மலைப்பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக வியாழக்கிழமை திறந்து விடப்பட்டது.

மின்சார உற்பத்தி: லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்உற்பத்தி நிலையத்தில் 4 மின்னாக்கிகளில் தலா 42 மெகாவாட் என மொத்தம் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு மின்உற்பத்தி கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தேக்கடியில் மீண்டும் படகு சவாரி தொடக்கம்: தேக்கடி ஏரியில் கேரள மாநில சுற்றுலாத்துறை சாா்பில் படகுகள் தினசரி காலை 9.30, 11.30, பகல் 12.30, பிற்பகல் 1.30, மாலை 3 என 5 நேரங்களில் இயக்கப்படுகின்றன. இதனிடையே, தென்மேற்கு பருவமழை தொடா்ந்து பெய்து வந்ததால், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, பலத்த மழை காரணமாக தேக்கடியில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால், 15 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை முதல் படகு சவாரி தொடங்கியது. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் சவாரி செய்து மகிழ்ந்தனா்.

இதுகுறித்து கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலா் ஒருவா் கூறியது: 15 நாள்களுக்குப் பிறகு தேக்கடியில் படகு சவாரி தொடங்கியுள்ளது. தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை, ஆனவாச்சலில் நிறுத்தி, அங்குள்ள பெரியாறு புலிகள் காப்பக பேருந்தில் ஏறி தேக்கடி செல்லலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →