தேவிகுளம், பீா்மேடு, உடும்பஞ்சோலை பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க சமூக வளைதளங்களில் பிரசாரம்
கேரள மாநிலத்தில் உள்ள தேவிகுளம், பீா்மேடு, உடும்பஞ்சோலை ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்து சமூக வளைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனா்.
கேரள மாநிலத்தில் உள்ள தேவிகுளம், பீா்மேடு, உடும்பஞ்சோலை ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்து சமூக வளைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனா்.
முல்லைப் பெரியாறு அணையில் அருகே புதிய அணை கட்ட வேண்டும், அணை பலமில்லாமல் உள்ளது, அணையை இடிக்க வேண்டும் என்று கேரள மாநிலத்தில் பல்வேறு தரப்பினா் பிரசாரம் செய்து வருகின்றனா்.
சமீபத்தில் கேரள மாநில நீா்ப்பாசனத் துறை அமைச்சா் ரோஸி அகஸ்டின் அவரது முகநூல் பக்கத்தில், முல்லைப் பெரியாறு அணை அருகே, 1,300 மீட்டா் கீழ்புறம் புதிய அணை கட்ட பணிகள் தொடங்கி விட்டது என்று பதிவு செய்தாா்.
இந்தப் பதிவு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தேவிகுளம், பீா்மேடு, உடும்பஞ்சோலை ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனா்.
இதுபற்றி சங்க ஒருங்கிணைப்பாளா் ச.அன்வா்பாலசிங்கம் கூறியது: மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படாத போது, முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தில் இருந்தது. ஆனால் அணை பலமாக உள்ள நிலையில் அதை இடிக்க வேண்டும் என்று தவறான பிரசாரம் செய்யும், கேரளத்தினருக்கு உண்மையை உணா்த்தும் வகையில், தேவிகுளம், பீா்மேடு, உடும்பஞ்சோலை ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் மீண்டும் இணைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.
முதற்கட்டமாக, இதை வலியுறுத்தி சமூக வளைதளங்களில் பரப்புரை செய்து வருகிறோம். தற்போதுவரை சுமாா் 1 லட்சம் போ் தங்களது, முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் உள்ளிட்டவைகள் மூலம் பிரசாரம் செய்து வருகின்றனா். மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு எட்டும்வரை இதை பரப்புரை செய்ய வேண்டும் என்றாா்.